"வீறு நடை போட்ட சிறுவன்" வாழ்கையை மாற்றிய மனித நேயம்
கயிறு கொடுங்கள் சாக வேண்டும் என்று கதறி அழுத 9 வயது சிறுவனை ஆயிரக்கணக்காக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கெத்தாக ரக்பி லீக் மைதானத்தில் வீறு நடை போட வைத்த நிகழ்வு, மனித நேயமே ஆகச் சிறந்தது என்பதை ஒரு முறை நிரூபித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்த் மாநிலத்தைச் சேர்ந்த யர்ராகா (Yarraka) என்பவர் பதிவிட்ட வீடியோ ஒன்றே தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
எலும்பு வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் குவாடன் பேல்ஸ், தனது குள்ளத்தன்மையால் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளானதால் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோ உலகையே உலுக்கியுள்ளது. தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தி சிறுவன் தேம்பி அழுத காட்சியை படம் பிடித்த அவனது தாயார் யர்ராகா, கொடுமைப்படுத்துதலின் விளைவுகளை பாருங்கள் என்று தனது வேதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்.
இது பலரால் பகிரப்பட்டநிலையில், குவாடனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் #iStand With Quaden என்ற ஹேஷ்டேக் மூலம் உலகெங்கிலும் இருந்து பிரபலங்களும், பொதுமக்களும் தங்கள் ஆதரவு கரங்களை நீட்டினர்.
மேலும் குவாடனை டிஸ்னிலேண்டு அனுப்பி சந்தோஷப்படுத்துவற்காக இதுவரை இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் நிதி திரப்பட்டட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலிய ரக்பி அணியை மைதானத்துக்கு வழிநடத்திச் செல்லும் கௌரவத்தை பெற்ற குவாடன், ஒரு கையில் ரக்பி பந்தினையும், இன்னொரு கையில் கேப்டன் ஜோயல் தாம்சன் கரங்களையும் பற்றிக்கொண்டு மனமகிழ்ச்சியுடன் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Comments